May 1, 2020

15 வழிகாட்டல்களைப் படித்து விட்டு அல்குர்ஆனை அணுகிப் பாருங்கள். பேராசிரியர் அப்லா அல்கஹ்லாவி-




அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பெண்கள் பிரிவின் இஸ்லாமிய சட்டத்துறை மற்றும் அரபு மொழிப் பிரிவின் பேராசிரியரும் அழைப்பாளருமான அப்லா அல்கஹ்லாவி அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் அல்குர்ஆனை அணுகும்போது கடைபிக்க வேண்டிய 15 வழிகாட்டல்களை வழங்கியுள்ளர். அவை வருமாறு:

01. முதலில் அல்குர்ஆன் ஓதுவதற்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். எமது அனைத்து வேலைகளும் முடிந்த பின்னர் எஞ்சியுள்ள நேரத்தை அல்குர்ஆனுக்கு கொடுக்கும் மனோநிலையை கண்டிப்பாக தவிர்ப்போம்.

02. அல்குர்ஆனை ஓத ஆரம்பிக்கும் முன் வுழூவை புதுப்பித்துக் கொள்கொள்வோம். கிப்லாவை முன்னோக்கி இருப்போம். அஊது, பிஸ்மிலுடன் ஓத ஆரம்பிப்போம். ஓதும்போது அல்குர்ஆன் ஓதுவதன் சிறப்புக்களை மனதில் இருத்திக் கொள்வோம்.

03. ஓதும் சப்தத்தை மத்திமமாக வைத்துக் கொள்வோம். மிக சப்தமாக ஓதும்போது நாம் களைப்படைவோம். அது பிறருக்கு இடையூறாகவும் அமையலாம். மிகவும் அமைதியாக ஓதும்போது சோர்வடைந்து தூக்கம் மிகைக்க வாய்ப்புண்டு. ஓதுகின்ற வேகத்தையும் மத்திமமாக வைத்துக் கொள்வோம். வேகமாக அல்லது மிக மெதுவாக ஓதும்போது சலிப்படைய இடமுண்டு.

04. அல்குர்ஆனுக்கென்று மகத்துவமும் கண்ணியமும் இருக்கிறது. யார் அல்குர்ஆனை மகத்துவப்படுத்துகிறாரோ அவருக்கு அல்லாஹ் மனிதர்களுக்கு மத்தியில் ஓர் அந்தஸ்த்தை ஏற்படுத்துவான். எனவே இன்னொருவருடன் கதைப்பதன் மூலம் அல்குர்ஆன் ஓதுவதை துண்டித்து விடாதிருப்போம்.

05. எமது முன்னோர்கள் ஓர் அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தால் அதனை ஓதி முடிக்கும் வரை இடையில் நிறுத்திவிட மாட்டார்கள். இது இறைவனின் வார்த்தைகளுடன் பண்பாடாக நடப்பதாகும். சிலர் வசனங்கள் முடிவுறும் இடங்களில் நிறுத்துவார்கள்.

06. நாம் ஓத ஆரம்பித்தால் இன்னொருவரின் பக்கம் திரும்பிப் பார்க்காது அவரின்பால் கவனத்தை திருப்பாதிருப்போம். யாராவது எம்முடன் பேச முனைந்தால் சைகை மூலம் மன்னிப்பு கோருவோம். இது நாம் அல்குர்ஆனை மகத்துவப்படுத்துவதற்கான ஓர் அடையாளமாகும்.

07. மிக அவசியமாக இன்னொருவருக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இருப்பின் உடனடியாக ஓதுவதை நிறுத்தி விடாது, ஒரு வசனத்தின் முடிவோ அல்லது பொருத்தமான இடமோ வரும் வரை காத்திருந்து ஓதுவதை நிறுத்துவோம்.

08. ஓதும்போது நாவை அசைப்பது அவசியமாகும். கண்களால் ஓதுவது ஓதலாக கருதப்பட மாட்டாது. ஓதியதற்கான கூலியும் கிடைக்காது.

09. எமக்குப் பரிச்சயமான சில அல்குர்ஆன் வசனங்களை ஓதிவிட்டு பின்னர் சமூக வலைதளங்களில் நுழைந்து நேரம் செலவளித்து பின்னர் மீண்டும் சில பக்கங்களைப் புரட்டுவது அல்குர்ஆனை அவமதிப்பதாகும்.

10. ஆண்கள் தொலைவிலுள்ள உங்களைப் பற்றிய அறிமுகம் குறைந்தவர்கள் உள்ள பள்ளிவாசலொன்றுக்குச் சென்றும் பெண்கள் வீட்டில் ஓர் அறையில் தனிமையாக இருந்து அல்லாஹ்வின் வேதத்தை சுவைக்கவும். அதன் வசனங்களை ஆழ்ந்து சிந்தித்து ததப்புர் செய்யுமாறும் உபதேசிக்கிறேன்.

11. தொலைபேசி மிகக் கெட்ட தோழனாகும். எனவே, அதனை வேறோர் இடத்தில் வைத்துவிட்டு தனிமையில் அல்குர்ஆன் ஓதுவதை பழக்கப்படுத்திக் கொள்வோம். ஏனெனில், அதனூடாக ஷைத்தான் இடையூறு செய்வான்.

12. அல்லாஹ்வின் அருள்கள், தண்டனை குறித்து பேசும் வசனங்களை ஓதுகின்ற சந்தர்ப்பங்களில் சற்று தரித்து இரு கரமேந்தி இறை அருளை வேண்டியும் தண்டனையிலிருந்து பாதுகாக்குமாறு கோரியும் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம். அவை உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

13. ஒருவர் மெதுவா ஓதுபவராக அல்லது சரளமாக ஓத சிரமப்படுபவராக இருந்தால் அவருக்கு இரட்டிப்புக் கூலி உண்டு. அத்தகையவர்கள் அல்குர்ஆனை கையடக்க தொலைபேசியில் அல்லது வேறு வகையில் ஒலிக்கச் செய்து அதனைத் தொடர்ந்து ஓதலாம்.

14. ஜுஸ்உகளின் முடிலில் ஓதுவதை நிறுத்துவதை விட ஸூராக்களின் முடிவில் ஓதுவதை நிறுத்துவது சிறந்தது. இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஓர் அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தால் அதனை முடிக்கும் வரை நிறுத்த மாட்டார்.

15. ஜுஸ்உக்களை ஓதி முடிப்பதிலுள்ள ஆர்வம், அல்குர்ஆன் வசனங்களை ஆழ்ந்து சிந்தித்து ததப்புர் செய்வதை விட்டும் எமது கவனத்தை திருப்பாதிருக்கட்டும். சில வசனங்களை இரண்டு மூன்று, பத்து தடவைகள் மீட்டி மீட்டி ஓதுவது உள்ளத்தை மென்மையாக்கும்.

அல்லாஹுத் தஆலா எம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக!

(அல் ஹஸனாத் மாத இதழின் இணைய தள பக்கத்தில் பிரசுரமான ஆக்கம்  http://alhasanath.lk/ah-5)

No comments:

Post a Comment

குத்ஸே....!

  குத்ஸே....! அறபு மூலம்: Nizar Qabbani தமிழில்: M.G.Mohammed Insaf என் கண்ணீர்த் துளிகள் வற்றிப் போகும் வரை அழுது தீர்த்தேன். மெழுகாய் ...