மரணம் என்பது அமைதியான ஒரு உபதேசியாகும். நாங்கள் இந்த வாழ்க்கையின் சந்தடிகளுக்குள் எம்மை தொலைத்து சில போது எமது வாழ்வின் நோக்கத்தை மறந்து, இலட்சியத்தை மறந்து, வாழ்கின்ற போது அவற்றை அந்த மரணம் எமக்கு ஞாபகப்படுத்துகிறது; இந்த உலக வாழ்வின் எதார்த்தத்தை ஒரு நொடியில் எமக்கு உணர்த்துகின்றது. எங்களுடைய அற்பமான ஆசைகள், வெறுப்புகள் கோபங்கள், பகைமைகள் குரோதங்கள், இவை அனைத்தும் உயர்ந்த மறுமை வாழ்க்கைக்கு முன்னால் அற்பமானது என்பதை அது உணர்த்துகின்றது.
எங்களுடைய மரணத்தின் பின்னர் தொடர்ந்தும் மனிதர்களுடைய உள்ளத்திலும் நிலையான சுவனத்திலும் எம்மை வாழ வைப்பது எங்களுடைய நற்பண்புகளும்,சிறந்த உயர்ந்த செயல்களுமே என்பதை அது உணர்த்துகின்றது.
இன்று மாவனல்லை சாஹிரா கல்லூரியின் 72 ஆவது தொகுதியில் கல்வி கற்க இணைந்த எமது வகுப்பு 100 ஆண் மாணவர்களுள் ஒரு சகோதரனை அல்லாஹ்வின் பக்கம் நாங்கள் வழி அனுப்பிவிட்டு,
கனத்த உள்ளத்துடன் அவருக்காக பிரார்த்தித்தவர்களாக இருக்கிறோம்.
எனது நினைவின் படி எமது 72 ஆம் தொகுதி மாணவர்களுள் மரணத்தை சந்தித்துள்ள *எட்டாவது (8)* நபராக எமது அன்புக்குரிய சகோதரன் மர்ஹூம் அஷ்ஷெய்ஹ் ஆஸாத் (ஹக்கானி) அவர்கள் இருக்கிறார்கள்.
40 வயதை எட்டுவதற்கு முன்னரே எம்மோடு நெருக்கமாக இருந்த சுமார் எட்டு சகோதரர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று சென்றிருக்கின்றனர்.
1. மர்ஹூம் யாஸீன் ( தரம் 4 ) (தனாகமை)
2. மர்ஹூம் பைஸல் ( தரம் 5) ( பெலிகம்மனை)
3. மர்ஹூம் ஹுஸ்னி ( தரம் 5) ( மாராவை)
4. மர்ஹூம் சுல்தான் ( தரம் 8 )(ஓவத்தை)
5. மர்ஹூம் ஜாபிர் ( தலால்) ( உயர்தரம் ) ( அக்கரை)
6. மர்ஹூம் அஸார்தீன் ( உயர் தர பரீட்சையின் சில நாட்களில்) (மாஹவத்தை
7. மர்ஹூம் பாஸில் ( உயர் தர பரீட்சையின் பின்) ( மாராவை)
8. மர்ஹூம் அஷ்ஷெய்ஹ் ஆஸாத்
இது மரணத்திற்கு வயது நேரமோ,காலமோ இல்லை. அடுத்த நொடியே எமது மரணம் சம்பவிக்கலாம் என்ற செய்தியை எமக்கு விட்டுச் செல்கின்றது.
நான் அறிந்த வகையிலே நண்பன் ஆஸாத் மிகச் சிறந்த பண்புமிக்க, நல்லொழுக்கம் மிக்க மனிதனாக இந்த உலகிலே வாழ்ந்தார். எப்போதும் புன்னகைத்த முகம், அமைதி ததும்பும் தோற்றம், அனைவருடனும் மிக மென்மையாகப் பேசும் சுபாவம், பிறருக்கு உதவி செய்யும் குணம், எங்களுடைய வகுப்பின் ஒன்று கூடல்களில் எப்போதுமே நேரம் ஒதுக்கி கலந்து கொள்ளும் இயல்பு, நண்பர்கள், அயலவர்கள் சிறியவர்கள், பெரியவர்கள் என்ற வேறுபாடு இன்றி அனைவரோடும் நல்ல முறையில் பழகக் கூடியவனாக காணப்பட்டான். இத்தகைய உயர்ந்த பண்புகளோடு சிறந்த நற்செயல்களில் ஈடுபட்ட ஒரு மனிதனாக அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று அவன் சென்றிருக்கிறான். அதேபோல அவனுடைய மரணம் ஒரு ஷஹாதத்துடைய மரணமாக அமைய வேண்டும்,
உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸில் எம் உயிரிலும் மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நபிமார்கள், நபித்தோழர்களோடு அவன் இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
எமது நண்பனுடைய இந்த மரணம் எங்களுக்கு பல செய்திகளை விட்டுச் செல்கின்றன.
1.நாம் எந்த அளவு தூரம் மரணத்துக்கு தயாராக இருக்கின்றோம்?
என்ற கேள்வியை எங்கள் முன் விட்டுச் சென்றிருக்கின்றது.
2. நாங்கள் மரணத்துக்குப் பின்னரான வாழ்க்கைக்கு எதனை சம்பாதித்து வைத்திருக்கின்றோம்?
என்ற கேள்விக்கு ஒரு தடவை எங்களை சுயவிசாரணை செய்து கொள்ளும் கடமையை உணர்த்திச் செல்கிறது.
3. அடுத்ததாக எங்களுடைய பண்பாடுகள் பிறருடனான எங்களுடைய உறவுகள் எப்படி இருக்கின்றன என்ற கேள்வியை என் முன் விட்டு செல்கிறது.
*அடுத்து ஒரு முக்கியமான விடயம் தான் எங்களுடைய வகுப்புத் தோழர்களுள் வீதி விபத்தில் மரணம் அடைந்த நான்காவது (4) நபராக எங்களுடைய நண்பர் மர்ஹூம் ஆஸாத் அவர்கள் இருக்கின்றார்*
அதே போல் எமது ஊரில் இத்தகைய விபத்துகள் மூலம் உயிரிழப்பு,
நிரந்தர அங்கவீனத்திற்கு உட்பட்டோர் பலர் இருக்கிறார்கள்.
எனவே இந்த மரணமானது எங்களுடைய சமூகத்திற்கு ஒரு செய்தியை விட்டுச் செல்கின்றது.
மனித உயிர்களின் பெறுமதி என்ன?
மனித உறுப்புகளின் பெறுமதி என்ன?, மனிதர்களது ஆரோக்கியத்தின் பெறுமதி என்ன?, இளமையின் பெறுமதி என்ன?, என்ற விடயங்களை எப்போதுமே நாங்கள் உணர்ந்திருக்க வேண்டும், அதனை மறந்து விடக்கூடாது.
என்னுடைய ஆரோக்கியத்திற்கோ என்னுடைய உயிருக்கும் என்னுடைய இளமைக்கோ எந்த ஆபத்தும் வந்து விடாது கவனமாக இருக்க வேண்டும்.
அத்துடன் என் மூலம் பிற மனித உயிருக்கோ ஆரோக்கியத்திற்கோ இளமைக்கோ குடும்பத்திற்கோ எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்ற கரிசனை ஒவ்வொரு இளைஞனுடைய உள்ளத்திலும் இருக்க வேண்டும்.
இது பெற்றோருக்கு ஒரு செய்தியை விட்டு செல்கின்றது தங்களுடைய பிள்ளைகளுடைய நடத்தை,
ஒழுக்கம், பண்பாடு, போன்றவற்றை மிகக் கவனமாக இருக்க வேண்டும். மற்றும் எமது பிள்ளைகள் எவ்வளவு சிறந்த பண்புள்ளவர்களாக இருந்த போதும், அவர்களுடைய இளமையின் வேகத்தையும், இளமைத் துடிப்பையும்,
நெறிப்படுத்த வேண்டும் என்ற ஒரு தார்மீக பொறுப்பு அவர்களிடம் இருக்கின்றது.
இந்த விடயத்தில் அவர்கள் தவறவிடும் பட்சத்தில் தங்களுடைய குழந்தைகளின் மூலம் பிள்ளைகளின் மூலம் ஏற்படுகின்ற தவறுகளுக்கு,
அப்பிள்ளைகள் மாத்திரமல்ல பெற்றோர்களும் கைசேதப்பட வேண்டிய நிலை ஏற்படலாம், காலம் முழுவதும் கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படலாம், மேலும் சமூகத்தில் கண்ணியமாக வாழ்பவர்களது கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படலாம் என்ற விடயம் பெற்றோரின் உள்ளத்தில் ஆழமாக பதிந்திருக்க வேண்டும்.
எனவே இதன் பின்னர் இத்தகைய மரணங்களோ விபத்துகளோ ஏற்படாத விதத்தில் உறுதிப்படுத்திக் கொள்வது அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது சமூகம் சார்ந்த அனைவர் மீதும் உள்ள பொறுப்பாகும் என்பதை நாங்கள் மறந்து விடக் கூடாது.
அஷ்ஷெய்ஹ் இன்ஸாப் நளீமி.
09-12- 2024
No comments:
Post a Comment