January 13, 2025

சரித்திர புருஷர் மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம்.




பீடிகை

இறைவன் ஒரு மனிதனுக்கு நலனை நாடினால் அவனை (சிறந்த விடயங்களுக்கு) பயன்படுத்திக் கொள்வான் என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள் 'இறைவனின் தூதரே எவ்வாறு அனை பயன்படுத்திக் கொள்வான்?' என கேட்டபோது 'அவரது மரணத்திற்கு முன்னர் நல்ல, சிறந்த பணிகளை செய்வதற்கான வழிகளை இலகுபடுத்திக் கொடுப்பான்' என்று இறைத்தூதர் அவர்கள் பதலளித்தார்கள்.

87 வருடங்கள் இந்த பூமியில் வாழ்ந்து அமைதியாக ஆரவாரமின்றி பல பணிகள் செய்த ஒரு நல்ல ஆன்மா தன் இறைவன் பக்கம் மீண்டுள்ளது.

'ஆதமின் மகன் மரணித்து விட்டால் மூன்று விடயங்களைத் தவிற அனைத்து அமல்களும் துண்டிக்கப்பட்டுவிடும் ஒன்று நிலையான தர்மம் இரண்டாவது பயனுள்ள கல்வி மற்றையது அவனுக்காக பிரார்த்திக்கும் நல்ல பிள்ளைகள்' என்ற நபி மொழக்கு அமைவாக, தனது நிலையான இல்லத்திற்கு அவர் நிறயவே சம்பாதித்து வென்றுள்ளார், அவை அனைத்தையும் இறைவன் அங்கீகரிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.


இளமையும் கல்வியும்

1937 ஆம் ஆண்டு மே மாதம் இருபத்தி ஐந்தாம் தேதி மாவனல்லை நகரில் அமைந்துள்ள உயன்வத்தை கிராமத்தில் அசன் லெப்பை மற்றும் ஹனீபா உம்மா அவர்களுக்கு மகனாக பிறந்தார்.

மௌலவி ஏ எல் எம் இப்ராஹிம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை தன்னுடைய கிராமத்தில் அமைந்துள்ள நூறானியா முஸ்லிம் வித்யாலயத்தில் கற்றார்.

 பின்னர் 1948 ஆம் ஆண்டு தன்னுடைய  11 வது வயதில்  மகரகமை கபூரிய்யா அரபுக் கல்லூரியில் இணைந்து மார்க்க கல்வியை பெற்றார் ஒன்பது வருடங்கள் அங்கே கல்வி கற்ற பின்னர் 1957 ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறினார்.

 தொடர்ந்து ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுவத்தி மூன்றாம் ஆண்டு அட்டாளச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை முடித்துக் கொண்டார்.

1966 ஆம் வருடம் தனது சொந்த முயற்சியினால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றினார்.  பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் G.A.Q  பரிட்சைக்கு தோற்று சித்தி அடைந்தார் அதன் பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தில் இளமானி B.A  பரீட்சைக்கு தோற்றி முதல் தர சித்தி அடைந்தார் தன்னுடைய முதுமாணிக்கட்கைக்காக பாகிஸ்தானில் அமைந்துள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டு முதுமாணி கற்கையை நிறைவு செய்தார்.

 மேலும் 1987 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் அமைந்துள்ள மன்னர் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை தொடர்ந்து அங்கும் முதுமாணிக்கையை நிறைவு செய்தார்.

கலாநிதி பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்காக “அரபு மதரஸாக்களின் தோற்றம் வளர்ச்சி”  தொடர்பான ஒரு தலைப்பில் தன்னுடைய ஆய்வு கட்டுரையை அவர் மேற்கொண்டார் போதிலும் அந்த ஆய்வை சமர்ப்பிக்க முடியாது போனது.

 பிற்பட்ட காலத்தில் மீண்டும் தன்னுடைய கலாநிதி கற்கையை நிறைவு செய்வதற்காக அமெரிக்கா செல்ல தீர்மானித்திருந்த போதிலும் கூட ஜமாத்தை இஸ்லாமியின் பொறுப்புக்களை சுமந்து இருந்ததனால் அவரால் அதனை நிறைவேற்ற முடியாது போனது.

மௌலவி இப்றாஹிம் அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட வாழ்விலும் பல உயர்ந்த பண்புகளைப் பெற்றவராக காணப்பட்டார், எப்போதும் பணிவானவராகவும், பிறரை மதிக்கக் கூடியவராகவும் காப்பட்டார்.

 அத்தோடு மாற்றுக் கருத்துக்களை செவிமடுப்பவராகவும், மதிக்கக் கூடியவராகவும் இருந்தார். பொறுமையும், பொறுப்புணர்வும் இவரிடம் காணப்பட்ட இன்னுமிரண்டு சிறப்புப் பண்புகள், எப்போம் தன்னை இற்றைப்படுத்திக் கொள்பவராகவும், தேசிய சர்வதேச விடங்களில் கரிசனையுள்ளவராகவும் காணப்பட்டதுடன், நிதானம் தவறாதவராகவும் தீர்மாணங்களில் உறுதியானவராகவும் காணப்பட்டார்.

 

அழைப்புப் பணியில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடுகளும் வழிமுறைகளும்

 



உஸ்தாத் இப்ராஹிம் அவர்கள் தூரநோக்கு உள்ள ஒரு தலைவராகவும்ஒரு செயல் வீரராகவும் காணப்பட்டார்.

சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் பல்வேறு அறிஞர்களுடனும் அமைப்புக்களுடனும் அவர் உறவைப் பேணி வந்தார். அதேவேளை எல்லா வகையான சிந்தனை சார்ந்த புத்தகங்களையும் வாசிக்கக் கூடியவராகவும் காணப்பட்டார்.

இமாம் ஹசன் அல் பன்னா, மௌலானா அபுல் ஹசன் அலி அந் நத்வி, மௌலானா மௌதூதி,  போன்றவர்கள் உட்பட இஸ்லாமிய உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த அறிஞர் பெறுமக்களின் சிந்தனைகளை கற்றார். ஆயினும்  எப்போதுமே தன்னுடைய சூழமைவை மையமாகக் கொண்டு அனைத்தையும் சிந்திக்க கூடியவராக காணப்பட்டார்.

உஸ்தாத் இப்றாஹீம் அவர்களது அழைப்புப் பணியின் ஆரம்ப காலங்களிலேயே அவரது எழுத்துப் பணியும் ஆரம்பித்தது என்று குறிப்பிடலாம், 1957களில் வெளிவந்த 'உண்மை உதயம்' 1958களில் வெளிவந்த 'வழிகாட்டிமற்றும் அல்ஹஸாத் போன்ற சஞ்சிகைளில் தொடர்ந்தும் எழுதிவந்ததுடன் புத்தகங்களையும் படைத்துள்ளார்.

 

உஸ்தாத் இப்ராஹிம் அவர்களுடைய எழுத்துக்கள், பேச்சுகள், செயற்பாடுகள் ஆகியவற்றை நாங்கள் அவதானிக்கின்ற போது எப்போதுமே

 1. நடுநிலையான சிந்தனை

2. சூழமை கருத்தில் கொள்ளல்

3.  இலகுபடுத்துதல்

 4.சிறுபான்மையினருக்கான சட்டச் சட்டகம்

5.  சகவாழ்வு

போன்ற கருத்துக்கள் தொணிப்பதனை  அவதானிக்க முடியும். அவர் எந்த காலத்திலும் இந்த அடிப்படைகளில் இருந்து விலகிச் செல்லவில்லை.

 

உஸ்தாத் இப்றாஹீமிடம் காணப்பட்ட இன்னுமொரு உயரிய பண்பு, எந்தப் பிரச்சனைக்கும், சிக்கல்களுக்கும் ஒருபோதும் சமூகத்தை குறை கூறமாட்டார், பிரச்சனைகள் எதுவாக இருப்பினும் அது கல்விசார் பிரச்சணையாக, பண்பாடு சார் பிரச்சணையாக, இருப்பு சார் பிரச்சணையாக, பொருளாதாரம் சார்ந்த பிரச்சணையாக எதுவாக இருந்து போதிலும் அந்த பிரச்சணைகளுக்கான அடிப்படையை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றி சிந்திக்கக் கூடியவராக காணப்பட்டார்.

அதேபோன்று அவருடைய தாவா வழிமுறைகளாக

1. சமூக ஒற்றுமை

2. நிறுவனங்களை அமைத்தல்

3. வளங்களை திட்டமிட்டு பயன்படுத்துதல்

4. பிறருடன் ஒத்துழைத்து பணியாற்றுதல்

5. தேசிய சர்வதேச உறவுகளை பலப்படுத்தல்

போன்ற விடயங்களை குறிப்பிட முடியும்.

உஸ்தாத் இப்ராஹீம் அவர்கள் மேற்கொண்டு வந்த பணிகளை நாங்கள் எடுத்து நோக்குகின்ற போது இவற்றை திட்டத் தெளிவாக உள்ள முடியுமாக இருக்கிறது.

இலங்கை முஸ்லிம் சமூகம் சார்ந்த எத்தகைய ஒரு பணி நடக்கப்பட்ட போதிலும் அதிலே ஏதோ ஒரு வகையிலே இவருக்கும் ஒரு வகிபாகம் காணப்படுகின்றது என்பதை அவதானிக்க முடியும் இந்த வகையில் அவரால் மேற்கொள்ளப்பட்ட சில பணிகளை நோக்குமிடத்து

1. பாடசாலை ஆசிரியராக சேவையாற்றியமை.

2. கபூரிய்யா அரபுக் கல்லூரியின் விரிவுரையாளராக கடமையாற்றியமை.

3.  பல்கலைக்கழ விரிவுரையாளராக கடமை ஆற்றியமை.

4. இலங்கை ஜமாத்தை இஸ்லாமியின் செயலாளர்.

5. இலங்கை ஜமாத்தே இஸ்லாமியரின் தலைவர்.

6. தேசிய கல்வி நிறுவனத்தின் ஆலோசகர்

7. ஜாமியா நளீமிய்யா உருவாக்கம் மற்றும் அதன் பாடத்திட்டத்தில் பங்காற்றியமை.

8. ஜம்இய்யதுல் உலமாவின் உயர் மட்ட உறுப்பின்ர்

9. இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்.

10. இஸ்லாஹிய்யா ஆண்கள் அரபுக் கல்லூரி.

11. இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி.

12. பாத்திமாதுஸ் ஸஹ்ரா அரபுக் கல்லூரி.

13. ஆயிஷா சித்திக்கா அரபுக் கல்லூரி.

14. Good Hope சர்வதேச பாடசாலை.

15. ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான சரண்டர் நிறுவனம்.

16. திஹாரியில் அமைந்துள்ள விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலை.

17. தன்வீர் அகடமி

போன்ற பல்வேறு வேலை திட்டங்களை மேற்கொண்டுள்ளார்.

 


அல்குர்ஆனின் செய்தி மக்களை சென்றடைய வேண்டும், மக்கள்  குர்ஆனை கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறுபட்ட முயற்சிகளை அவர் மேற்கொண்டு வந்துள்ளார்.

 குறிப்பாக தஃவதுல் குர்ஆன் என்ற அமைப்பை நிறுவி அதற்கு ஊடாக போட்டி நிகழ்ச்சிகளை நடத்துதல் புத்தகங்களை வெளியிடுதல் என்ற பல்வேறு விதமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வந்தார்.

அல்குர்ஆனை ஓதுவோம்

அதனை விளங்குவோம்

அதன்படி நடப்போம்

அதன்பால் அழைப்போம்.

என்ற வாசங்கள் இன்றும் நினைவில் நீங்காது இருக்கிறது.

மௌலானா அபுல் அஃலா மௌதூதி அவர்கள் எழுதிய தப்ஹீமுல் குர்ஆன் அல்குர்ஆன் விரிவுரையை சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கும் திட்டத்தை ஆரம்பித்து அதில் பல ஆலிம்களையும் துறை சார்ந்தவர்களையும் இணைத்துக் கொண்டு திட்டத்தை நிறைவு செய்தார்.

முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும், ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு முன்னின்று உழைத்துள்ளார், 1980களில் மஸ்ஊத் ஆலிம் போன்றோருடன் இணைந்து 'இத்திஹாதுல் முஸ்லிமின்அமைப்பை நிறுவி அதற்காக உழைத்தார்.

அது மாத்திரம் இல்லாமல் பல்வேறு சர்வதேச தேசிய தொண்டு நிறுவனங்களின் உருவாக்கத்தில் அதன் ஸ்தாபக உறுப்பினராக அவர் செயல்பட்டு இருக்கின்றார் உதாரணமாக வாமி நிறுவனம், சர்வதேச இஸ்லாமிய நலன்புரி அமைப்பு  போன்ற சர்வதேச அமைப்புகளை குறிப்பிட முடியும்.

அது மாத்திரமில்லாமல் பல்வேறு சர்வதேச அறிஞர்களுடனான உறவைப் பேணி வந்துள்ளார் கலாநிதி அஹ்மத் தொதன்ஜி, நாதிர் நூரி, மலேசியா பிரதமர் அன்வர் இப்ராகிம் இன்னும் பல சர்வதேச அறிஞர்களை நண்பராக நண்பர்களாக இவர் கொண்டு இருந்தார்.

 

ஆரவரமில்லாமல் அமைதியாய் இறை பணி செய்து, புனித றமழானில் தன் இறைவன் பக்கம் மீண்டுள்ள இந்த மாமனிதரை அல்லாஹ் பொறுந்திக் கொண்டு அவனது உயர்ந்த ஜன்னதுல் பிர்தௌஸில் அவனது ஹபீப் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருக்கும் பாக்கியத்தை வழங்க பிரார்த்திக்கிறேன்.


January 2, 2025

திடீர் மரணங்கள் விட்டுச் செல்லும் செய்தி.



மரணம் என்பது அமைதியான ஒரு உபதேசியாகும். நாங்கள் இந்த வாழ்க்கையின் சந்தடிகளுக்குள் எம்மை தொலைத்து சில போது எமது வாழ்வின் நோக்கத்தை மறந்து, இலட்சியத்தை மறந்து, வாழ்கின்ற போது அவற்றை அந்த மரணம் எமக்கு ஞாபகப்படுத்துகிறது; இந்த உலக வாழ்வின் எதார்த்தத்தை ஒரு நொடியில் எமக்கு உணர்த்துகின்றது. எங்களுடைய அற்பமான ஆசைகள், வெறுப்புகள் கோபங்கள், பகைமைகள் குரோதங்கள், இவை அனைத்தும் உயர்ந்த மறுமை வாழ்க்கைக்கு முன்னால் அற்பமானது என்பதை அது உணர்த்துகின்றது.

எங்களுடைய மரணத்தின் பின்னர் தொடர்ந்தும் மனிதர்களுடைய உள்ளத்திலும் நிலையான சுவனத்திலும் எம்மை வாழ வைப்பது எங்களுடைய நற்பண்புகளும்,சிறந்த உயர்ந்த செயல்களுமே என்பதை அது உணர்த்துகின்றது.

இன்று மாவனல்லை சாஹிரா கல்லூரியின் 72 ஆவது தொகுதியில் கல்வி கற்க இணைந்த எமது வகுப்பு 100 ஆண் மாணவர்களுள் ஒரு சகோதரனை அல்லாஹ்வின் பக்கம் நாங்கள் வழி அனுப்பிவிட்டு, கனத்த உள்ளத்துடன் அவருக்காக பிரார்த்தித்தவர்களாக இருக்கிறோம்.

எனது நினைவின் படி எமது 72 ஆம் தொகுதி மாணவர்களுள் மரணத்தை சந்தித்துள்ள *எட்டாவது (8)* நபராக எமது அன்புக்குரிய சகோதரன் மர்ஹூம் அஷ்ஷெய்ஹ் ஆஸாத் (ஹக்கானி) அவர்கள் இருக்கிறார்கள்.

40 வயதை எட்டுவதற்கு முன்னரே எம்மோடு நெருக்கமாக இருந்த சுமார் எட்டு சகோதரர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று சென்றிருக்கின்றனர்.

1. மர்ஹூம் யாஸீன் ( தரம் 4 ) (தனாகமை)

2. மர்ஹூம் பைஸல் ( தரம் 5) ( பெலிகம்மனை)

3. மர்ஹூம் ஹுஸ்னி ( தரம் 5) ( மாராவை)

4. மர்ஹூம் சுல்தான் ( தரம் 8 )(ஓவத்தை)

5. மர்ஹூம் ஜாபிர் ( தலால்) ( உயர்தரம் ) ( அக்கரை)

6. மர்ஹூம் அஸார்தீன் ( உயர் தர பரீட்சையின் சில நாட்களில்) (மாஹவத்தை

7. மர்ஹூம் பாஸில் ( உயர் தர பரீட்சையின் பின்) ( மாராவை)

8. மர்ஹூம் அஷ்ஷெய்ஹ் ஆஸாத்



இது மரணத்திற்கு வயது நேரமோ,காலமோ இல்லை. அடுத்த நொடியே எமது மரணம் சம்பவிக்கலாம் என்ற செய்தியை எமக்கு விட்டுச் செல்கின்றது.

நான் அறிந்த வகையிலே நண்பன் ஆஸாத் மிகச் சிறந்த பண்புமிக்க, நல்லொழுக்கம் மிக்க மனிதனாக இந்த உலகிலே வாழ்ந்தார். எப்போதும் புன்னகைத்த முகம், அமைதி ததும்பும் தோற்றம், அனைவருடனும் மிக மென்மையாகப் பேசும் சுபாவம், பிறருக்கு உதவி செய்யும் குணம், எங்களுடைய வகுப்பின் ஒன்று கூடல்களில் எப்போதுமே நேரம் ஒதுக்கி கலந்து கொள்ளும் இயல்பு, நண்பர்கள், அயலவர்கள் சிறியவர்கள், பெரியவர்கள் என்ற வேறுபாடு இன்றி அனைவரோடும் நல்ல முறையில் பழகக் கூடியவனாக காணப்பட்டான். இத்தகைய உயர்ந்த பண்புகளோடு சிறந்த நற்செயல்களில் ஈடுபட்ட ஒரு மனிதனாக அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று அவன் சென்றிருக்கிறான். அதேபோல அவனுடைய மரணம் ஒரு ஷஹாதத்துடைய மரணமாக அமைய வேண்டும், உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸில் எம் உயிரிலும் மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நபிமார்கள், நபித்தோழர்களோடு அவன் இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

எமது நண்பனுடைய இந்த மரணம் எங்களுக்கு பல செய்திகளை விட்டுச் செல்கின்றன.

1.நாம் எந்த அளவு தூரம் மரணத்துக்கு தயாராக இருக்கின்றோம்? என்ற கேள்வியை எங்கள் முன் விட்டுச் சென்றிருக்கின்றது.

2. நாங்கள் மரணத்துக்குப் பின்னரான வாழ்க்கைக்கு எதனை சம்பாதித்து வைத்திருக்கின்றோம்? என்ற கேள்விக்கு ஒரு தடவை எங்களை சுயவிசாரணை செய்து கொள்ளும் கடமையை உணர்த்திச் செல்கிறது.

3. அடுத்ததாக எங்களுடைய பண்பாடுகள் பிறருடனான எங்களுடைய உறவுகள் எப்படி இருக்கின்றன என்ற கேள்வியை என் முன் விட்டு செல்கிறது.

*அடுத்து ஒரு முக்கியமான விடயம் தான் எங்களுடைய வகுப்புத் தோழர்களுள் வீதி விபத்தில் மரணம் அடைந்த நான்காவது (4) நபராக எங்களுடைய நண்பர் மர்ஹூம் ஆஸாத் அவர்கள் இருக்கின்றார்*

அதே போல் எமது ஊரில் இத்தகைய விபத்துகள் மூலம் உயிரிழப்பு, நிரந்தர அங்கவீனத்திற்கு உட்பட்டோர் பலர் இருக்கிறார்கள்.

எனவே இந்த மரணமானது எங்களுடைய சமூகத்திற்கு ஒரு செய்தியை விட்டுச் செல்கின்றது.

மனித உயிர்களின் பெறுமதி என்ன? மனித உறுப்புகளின் பெறுமதி என்ன?, மனிதர்களது ஆரோக்கியத்தின் பெறுமதி என்ன?, இளமையின் பெறுமதி என்ன?, என்ற விடயங்களை எப்போதுமே நாங்கள் உணர்ந்திருக்க வேண்டும், அதனை மறந்து விடக்கூடாது.

என்னுடைய ஆரோக்கியத்திற்கோ என்னுடைய உயிருக்கும் என்னுடைய இளமைக்கோ எந்த ஆபத்தும் வந்து விடாது கவனமாக இருக்க வேண்டும்.

அத்துடன் என் மூலம் பிற மனித உயிருக்கோ ஆரோக்கியத்திற்கோ இளமைக்கோ குடும்பத்திற்கோ எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்ற கரிசனை ஒவ்வொரு இளைஞனுடைய உள்ளத்திலும் இருக்க வேண்டும்.

இது பெற்றோருக்கு ஒரு செய்தியை விட்டு செல்கின்றது தங்களுடைய பிள்ளைகளுடைய நடத்தை, ஒழுக்கம், பண்பாடு, போன்றவற்றை மிகக் கவனமாக இருக்க வேண்டும். மற்றும் எமது பிள்ளைகள் எவ்வளவு சிறந்த பண்புள்ளவர்களாக இருந்த போதும், அவர்களுடைய இளமையின் வேகத்தையும், இளமைத் துடிப்பையும், நெறிப்படுத்த வேண்டும் என்ற ஒரு தார்மீக பொறுப்பு அவர்களிடம் இருக்கின்றது.

இந்த விடயத்தில் அவர்கள் தவறவிடும் பட்சத்தில் தங்களுடைய குழந்தைகளின் மூலம் பிள்ளைகளின் மூலம் ஏற்படுகின்ற தவறுகளுக்கு, அப்பிள்ளைகள் மாத்திரமல்ல பெற்றோர்களும் கைசேதப்பட வேண்டிய நிலை ஏற்படலாம், காலம் முழுவதும் கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படலாம், மேலும் சமூகத்தில் கண்ணியமாக வாழ்பவர்களது கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படலாம் என்ற விடயம் பெற்றோரின் உள்ளத்தில் ஆழமாக பதிந்திருக்க வேண்டும்.

எனவே இதன் பின்னர் இத்தகைய மரணங்களோ விபத்துகளோ ஏற்படாத விதத்தில் உறுதிப்படுத்திக் கொள்வது அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பது சமூகம் சார்ந்த அனைவர் மீதும் உள்ள பொறுப்பாகும் என்பதை நாங்கள் மறந்து விடக் கூடாது.

அஷ்ஷெய்ஹ் இன்ஸாப் நளீமி.

09-12- 2024

 

சரித்திர புருஷர் மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம்.

பீடிகை இறைவன் ஒரு மனிதனுக்கு நலனை நாடினால் அவனை (சிறந்த விடயங்களுக்கு) பயன்படுத்திக் கொள்வான் என இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க...