குத்ஸே....!
அறபு மூலம்: Nizar Qabbani தமிழில்: M.G.Mohammed Insaf
என் கண்ணீர்த் துளிகள் வற்றிப் போகும் வரை அழுது தீர்த்தேன்.
மெழுகாய் உருகித் தொழுதேன்.
சோர்ந்து போகும்வரை ருகூஉ செய்தேன்.
***********
குத்ஸே!
இறைத் தூதர்களை பிரசவித்த பூமியே;
விண்ணுக்கும் மண்ணுக்குமான கிட்டிய பாதையே;
இறை வழிகாட்டல்களின் கலங்கரையே;
விரல்கள் எரிக்கப்பட்ட அழகிய சிறுமியே;
வீர மங்கையே...
உன் விழிகளில் கவலை தோய்ந்துள்ளது ஏனோ?
**********
நபிமார்கள் சஞ்சரித்த நந்தவனமே;
உன் தெருவெங்கும் சோகம் முகாமிட்டுள்ளது ஏனோ?
பள்ளிவாசலின் மினாராக்களில் துயரம் குடிகொண்டது ஏனோ?
************
குத்ஸே....!
அந்தகாரம் குடிகொண்டுள்ள நகரே;
இனி ஞாயிறு காலைகளில் திருக்கல்லறை தேவாலயத்தின் மணியை முழங்கச் செய்வது யாரோ?
கிறிஸ்மஸ் இரவுகளில் குழந்தைகளுக்கு பரிசுகள் சுமந்து வரப்போவது யாரோ?
**************
குத்ஸே...!
சோகமே உருவான
நகரே;
விழியோரத்தில் பூத்த கண்ணீர் துளியே;
உன்மீது தொடுக்கப்பட்ட போரை நிறுத்தப் போவது யாரோ?
**************
மதங்களை சுமந்த முத்தே;
உன் சுவர்களில் தோய்ந்துள்ள உதிரத்தை சலவை செய்வது யாரோ?
இன்ஜீலை யார் தான் காப்பர்?
குர்ஆனை யார்தான் காப்பர்?
மாந்தரை யார் தான் காப்பர்?
*************
குத்ஸே...!
என் தேசமே...!
குத்ஸே...!
என் நேசத்துக்குறியவளே ...!
என் தேசமே...!
சாந்தியின் நகரே....!
ஒலிவ் மரங்களின் பூமியே....!
நாளை... ஆம் நாளை...
எலுமிச்சம் மரங்கள் பூத்துக் குலுங்கும்...
நெற்கதிர்களும் மரக்கிளைகளும் பசுமை போர்த்தி பரவசம் கொள்ளும்...
விழிகள் புன்னகைக்கும்...
தொலை தூரம் பறந்த புறாக்கள்
மீண்டும் புனித இல்லங்களின் கூரைகளுக்கு திரும்பும்...
உன் தெருவெங்கும்;
பிள்ளைகள் விளையாடி மகிழ்வர்...
பெற்றோரும் பிள்ளைகளும் சந்தித்து ஆரத் தழுவிக் கொள்வர்...